Monday, 27 January 2014

செவ்வாயும், கழிப்பறைகளும்!

ப.ரகுமான்

"விண்வெளிப் பயணம் என்பது மதிநுட்பத்தின்

வெற்றியாக இருக்கலாம். ஆனால் அது பகுத்தறிவின்

சோகமான தோல்வி" - மேக்ஸ் பான்

நவீன இயற்பியலின் உச்சமான குவாண்டம் இயங்கியலின் (quantum mechanics) வளர்ச்சிக்கு வித்திட்டவரும், அதற்காக நோபல் பரிசு பெற்றவருமான மேக்ஸ் பான், விண்வெளித் திட்டங்களுக்காக பெருந்தொகை செலவிடப்படுவதை ஊதாரித்தனமான ஆடம்பரம் என்றார். சிற்சில, பெரும் வணிக நலன்களை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், அது பெரும் செலவு பிடிக்கக்கூடிய விளையாட்டு என்பதுதான் அவரது கருத்து.

1962ல் இந்திய விண்வெளி ஆணையம் நிறுவப்பட்டது. அதே ஆண்டில்தான் திருவனந்தபுரம் அருகே அமைந்த மீன்பிடிக் கிராமமான தும்பாவில், முதல் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டது. இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று கூறப்படும் விக்ரம் சாராபாய் அப்போது எழுதினார்: "வளர்ந்து வரும் நாட்டிற்கு விண்வெளி ஆய்வு தேவையா என சந்தேகிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் நம்முடைய நோக்கம் தெளிவானது. நமது நாட்டவர்களுக்கும் சமூகத்திற்கும் நலம்பயக்கும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில், எந்த நாட்டையும்விட நாம் பின்தங்கிவிடக்கூடாது".

செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் மங்கல்யான் திட்டத்தை ஒட்டியும் இதே வாதப் பிரதிவாதங்கள் எழுவதை நாம் பார்க்கிறோம். நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது விண்வெளி ஆய்வுகள், மனிதகுல வளர்ச்சிக்கு முக்கியமானவை என்பது, இரண்டாவது கருத்துக்கு இடமற்றது. அதேநேரம் அத்தகைய வளர்ச்சி என்பது பெரும் வணிக நலன்களின் ஊடாகத்தான் சாதிக்கப்படுகிறது என்பதையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் திட்டத்தை அணுக வேண்டும். செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் நாட்டில் 60 கோடி பேருக்கு ஏன் கழிப்பறை வசதி இல்லை என்பதற்கான விளக்கமும் இதில்தான் ஒளிந்திருக்கிறது.

செவ்வாய்க்கு ஏன் முக்கியத்துவம்?

சூரிய மண்டலத்தில், சூரியனில் இருந்து நான்காவதாக உள்ள கோள் செவ்வாய். அதன் மேற்பரப்பில் இரும்பு ஆக்சைடு அதிகமாகக் காணப்படுவதால், துருப்பிடித்த இரும்பு போல செந்நிறமாகக் காட்சியளிக்கிறது. அதனால்தான் தமிழர்கள் செவ்வாய் என்று பெயரிட்டனர். நிலத்தரையையும், மிகமிக அடர்த்தி குறைந்த வளிமண்டலமும் உள்ளது. புவியில் உள்ளது போன்ற எரிமலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள், பனிமூடிய துருவப் பகுதிகளையும் கொண்டது. செவ்வாயின் சுழற்சிக் காலமும், பருவ மாற்றங்களும் புவியைப் போன்றே உள்ளன. பூமிக்கு ஒரு நிலவு இருப்பது போல, செவ்வாய்க்கு 2 நிலவுகள், அதாவது துணைக்கோள்கள் உள்ளன.

செவ்வாயில் ஒரு காலத்தில் நீர் பெருக்கம் இருந்ததாகவும், உயிரினங்கள் வாழத் தகுந்த சூழ்நிலை இருந்ததாகவும் கருதப்படுகிறது. அது உண்மையா? உண்மை என்றால் செவ்வாயின் இன்றைய நிலை என்ன? பூமியைப் போன்ற அடர்த்தியான வளிமண்டலத்தைப் பெற்றிருந்த செவ்வாய், காலப் போக்கில் ஏன் வளிமண்டலத்தை இழந்தது? அது எப்படி நடைபெற்றது? செவ்வாயில் இனி உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? இந்த கேள்விகளுக்கு விடை தேடும் முயற்சியாகவே செவ்வாயை நோக்கிய விண்வெளித் திட்டங்கள் அமைந்துள்ளன.

செவ்வாய்க்கு இதுவரை 51 விண்வெளித் திட்டங்கள் செயல்படுத்தப்ப

ட்டுள்ளன. அதில் 21 திட்டங்கள் மட்டுமே வெற்றிபெற்றுள்ளன. 30 திட்டங்கள் தோல்வியைத் தழுவின. இந்த விஷயத்தில் ஜப்பானும், சீனாவும் தோல்வியையே பரிசாகப் பெற்றன. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமே இதுவரை வெற்றிக்கனியை தட்டிப்பறித்துள்ளன.

செவ்வாய், பூமியைப் போல, சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் கோள். இதனால் எல்லா காலகட்டங்களிலும், பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான தூரம் சமமாக இருக்காது. 4 கோடி கிலோமீட்டரில் இருந்து 40 கோடி கிலோமீட்டர் தூரம் வரை அது வேறுபடக் கூடியது. இதற்கான கணக்கீடுகளின் அடிப்படையில், 26 மாதங்களுக்கு ஒருமுறைதான் பூமியிலிருந்து செவ்வாய்க்கு விண்வெளித் திட்டங்களை செயல்படுத்த முடியும். இந்த ஆண்டில் நவம்பர் மாதம் அதற்கு உகந்த மாதம். அதனால்தான் இந்தியாவின் மங்கள்யானும், அமெரிக்காவின் மேவனும் (MAVEN) அடுத்தடுத்து ஏவப்பட்டன.

இதற்கு முன்னர், செவ்வாய்க்கு விண்கலங்களும், ஆய்வூர்திகளும் அனுப்பப்பட்டுள்ளன. தற்போது அமெரிக்காவின் மார்ஸ் ஒடிசி (Mars Odyssey), மார்ஸ் ரெக்கனயன்ஸ் ஆர்பிட்டர் (Mars Reconnaissance Orbite) ஆகிய 2 விண்கலங்களும் செவ்வாயை சுற்றிவருகின்றன. கியூரியாசிட்டி, ஆப்பர்சுனிட்டி ஆகிய 2 ஆய்வூர்திகளும் செவ்வாயின் பரப்பி்ல் ஊர்ந்து ஆய்வு செய்து வருகின்றன.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, நவம்பர் 5ம் தேதி செவ்வாய்க்கிழமை, பிஎஸ்எல்வி சி-25 ஏவூர்தி (ராக்கெட்) மூலம் மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவி, புவியின் சுற்றுவட்டப்பாதையில் செலுத்தியது. அதில் தொடங்கி, படிப்படியாக அதன் சுற்றுவட்டப் பாதை உயர்த்தப்பட்ட நடவடிக்கைகள் எல்லாம், ஊடகங்களில் விலாவாரியாக விவரிக்கப்பட்டது.

மங்கள்யான் திட்டம் 3 கட்டங்களைக் கொண்டது. புவி வட்டப்பாதையில் செலுத்தி, அதன் சுற்றுவட்டப் பாதையை படிப்படியாக 2 லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கு உயர்த்துவது முதல் கட்டம். புவியின் ஈர்ப்பு பிடியில் இருந்து விடுவித்து, செவ்வாயை நோக்கி செலுத்துவது இரண்டாவது கட்டம். 10 மாதங்கள் பயணம் செய்து, செவ்வாயை அடைந்த பிறகு, அதன் சுற்றுவட்டப்பாதையில் செலுத்துவது 3வது கட்டம். இந்த 3வது கட்டத்தை கடந்தால்தான் அது வெற்றி.

சரி இந்த விவரங்கள் ஒருபுறம் இருக்கட்டும். இந்தி மொழியில் செவ்வாய்க்கு மங்கள் என்று பெயர். மங்கள்யான் என்றால் செவ்வாய் கலம் (Mars ship) என்று பொருள். செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் இந்த நாட்டில் செவ்வாயை வைத்து எத்தனை மூடநம்பிக்கைகள்? விண்வெளித் திட்டங்களுக்கான செலவு வீண்தானா என்பதைவிட, உண்மையில் விவாதிக்கப்பட வேண்டியது இதுதான்.

No comments:

Post a Comment